பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டப துாண்களில், தமிழனின் கலைத்திறனை உலகுக்கு வெளிகாட்டும் வகையில், 18ம் நுாற்றாண்டிலேயே, 3 டி எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தில், உருவாக்கப்பட்ட சிற்பங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
பஞ்சபூதத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ராஜகோபுரத்திற்கு முன், 16 கால் மண்டபம் உள்ளது.இம்மண்டபத்தை, கி.பி., 1889ம் ஆண்டில், நாட்டுக்கோட்டை
நகரத்தார் லட்சுமண செட்டியார், லட்சக்கணக்கான ரூபாய் செலவில், ஒவ்வொரு துாண்களிலும், உயிரோட்டத்துடன் கூடிய கலைநயமிக்க சிற்பங்களை வடிவமைத்துள்ளதாக, கோவில் தலவரலாறு கூறுகிறது.
வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி, உள்ளூர் பக்தர்கள் பலரும், 16 கால் மண்டபத்திற்கு செல்லும் போது, அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்வர்.மண்டபத்திற்கு அழகூட்டும் வகையில், துாண்களில் உள்ள கலைநயமிக்க சிற்பங்களை பலரும் பார்த்திருக்க
மாட்டார்கள்.இதில் உள்ள ஒவ்வொரு சிற்பமும், புராணத்தில் வந்த கதைகளை நினைவுபடுத்துகின்றன.
குறிப்பாக, விஞ்ஞான வளர்ச்சியும், நவீன தொழில் நுட்பமும் இல்லாத, 18ம் நுாற்றாண்டிலேயே, தமிழனின் கற்பனைத்திறனையும், கலைத்திறனையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில், 3 டி எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில், இச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரு உடல், ஒரு தலை உடைய ரிஷப குஞ்சரம் சிற்பம்; இரு தலை, நான்கு உடல் உடைய குதிரை சிற்பம், ஒரு உடல் மூன்று தலையுள்ள மான் உள்ளிட்ட சிற்பங்களை, மிகவும்நேர்த்தியாக முப்பரிமாண வடிவத்தில் செதுக்கியுள்ளனர்.
சிவாலயங்களில், சிவன், சக்தி இருவருக்கும் இடையில் கந்தன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வடிவமே சோமாஸ்கந்த வடிவமாக இருக்கும். இங்கு மிகவும் அரிதாக, சிவ, பார்வதிக்கு இடையில், விநாயகர் இருப்பது அதிசயமாக கருதப்படுகிறது. கண்ட பேருண்டா என்ற பறவை, இருதலை ஓர் உடலுடன் உள்ள சிற்பம் உள்ளது. இது, விஜய நகர அரசு தோன்ற காரணமான, ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இருவரையும் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின், பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க, சிவபெருமான், பாதி பறவையாகவும், பாதி சிங்கமாகவும் எடுத்த, ஷரபேஸ்வர அவதார சிற்பம் உள்ளது. காஞ்சி புராணத்தின்படி, வராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்த, வராக அவதாரத்தின் மீது சிவபெருமான் வேடன் வடிவில் அம்பு எய்தும் சிற்பமும் உள்ளது. பரசுராமர், வரத கஜ மூர்த்தி, மச்சம், கூர்மம், பிரம்மா போரிடும் காட்சி, போரை துவக்கும் வீரன், அன்ன வாகனத்தில் சரஸ்வதி சிற்பம், ஹனுமனுடன் சுக்ரீவன் இருக்கும் சிற்பம் என, பல அழகிய சிற்பங்கள் உள்ளன.பல புராண பக்தி கதைகளை, நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 16 கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், காண்போரின் கண்களுக்கு விருந்து படைக்கிறது.