லக்னோ: உ.பி., அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் ஜன.,26ல் துவங்க இருப்பதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அறிவித்துள்ளது.
பல வருடங்களாக நீடித்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கிற்கான தீர்ப்பினை கடந்த 2019ம் வருடம் உச்சநீதிமன்றம் வழங்கியது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளவும் அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்காக தனியாக 5 ஏக்கர் இடம் ஓதுக்கப்படுவதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜன., 26ம் தேதி காலை 8 30 மணியளவில் அயோத்தியில் உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் இந்திய தேசிய கொடியேற்றத்துடன் மசூதி கட்டும் பணி துவங்க உள்ளது. இது தொடர்பாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் 9 உறுப்பினர்கள் கடந்த ஞாயிறன்று கலந்து ஆலோசித்தனர். இந்திய வரித்துறையிலிருந்து முழு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மசூதி கட்டும் பணி துவங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடுதல் பற்றி இஸ்லாமிய அறக்கட்டளை தெரிவத்ததாவது, ‛ உலக வெப்பமயமாதல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமேசான் காடுகள் மற்றும் ஆஸி காடுகளில் ஏற்பட்ட தீயை மறக்க முடியாது. இவை குறித்து மக்களிடம் விழப்புணர்வு ஏற்பட வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த மாதம் இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையானது புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது. மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நூலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.