பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
ஊட்டி: ஊட்டி அருகே முத்தநாடு மந்தில், தோடர் பழங்குடி மக்களின், மொற்பர்த் பண்டிகை நடந்தது.நீலகிரியில் வாழும், தோடர் இன மக்கள், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதியை, தங்களின் புத்தாண்டாக கொண்டாடு கின்றனர்; அவர்களது மொழியில், மொற்பர்த் என, அழைக்கப்படுகிறது.
நடப்பாண்டு விழா சற்று தாமதமாக, தோடர் இன மக்களின் தலைமையிடமாக கருதப்படும், ஊட்டி அருகேயுள்ள முத்த நாடு மந்துவில், நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, விழா எளிமையாக நடத்தப்பட்டதால், முக்கிய நபர்கள் மட்டும் பங்கேற்றனர்.காலை, 11:30 மணிக்கு, குல தெய்வ கோவிலில் உள்ள, மூன்பவ், அயன்ஓவ் தெய்வங்களுக்கு, வழிபாடு நடத்தினர். கொரோனாவில் இருந்து விடுபடவும், இயற்கை பாதிக்காமல் இருக்கவும் வழிபட்டனர். பின், ஒவ்வொரு குடும்பத்தினரும், தலைக்கு 1 ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடையணிந்து, வீரக் கல் துாக்கும் விளையாட்டு மற்றும் ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். இன்று வளர்ப்பு எருமைகளை வழிபட்டு, அவற்றுக்கு உப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.