பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
உத்திரமேரூர்: உலக நன்மைக்காக, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் நேற்று, 108 கோ பூஜை நடந்தது.உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதி - காஞ்சிபுரம் சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும், உலக நன்மை, குடும்ப நன்மை, செல்வம் பெருக, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ, 108 கோ பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஐந்தாம் ஆண்டு கோ பூஜை விழா, காணும் பொங்கல் தினமான நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், நவக்கிரஹங்கள், சிவசுப்ரமணியர் அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, உற்சவர் விநாயகருக்கு, சந்தனம், ஜவ்வாது, தேன், பால், என, 16 வகையான நறுமணம் கமழும் பொருட்களால் அபிஷேகம் நடந்தது.பின், 108 பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மாலை, வஸ்திரம் அணிவித்து கோ பூஜை விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, கோ மாதாவை வணங்கினர்.