பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
மதுரை : கோவிந்தா நாமாவை மனமுருக சொல்வோருக்குஒரு குறையும் ஏற்படாது,என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த தை சிறப்பு நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.
குறையொன்றுமில்லை கோவிந்தா என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: குறையொன்றுமில்லை என்ற சொற்பதமே ஒரு நேர்மறை சொல். மூதறிஞர் ராஜாஜி குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என எழுதிய பாடலை கர்நாடகஇசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இனியகுரலில் பாடவும், இப்பாடலும், சொல்லும் அழியா இடத்தை பெற்று விட்டது. ராம நாமம் முக்திக்கு வழி. கோவிந்த நாமம் நல்ல பக்தி வழி.விஷ்ணுவுக்குரிய நாமங்கள் ஆயிரம். அதை சகஸ்ரநாமம் என்கிறோம். அதில் கோவிந்தா நாமத்தை தான் ஒரு முறைக்கு மூன்று முறை சொல்லியுள்ளனர். வைதீகர்கள் சந்தியாவந்தனம் செய்கையில் கூறிடும் 12 நாமங்களில் இந்த நாமம் இருமுறை கூறப்படுகிறது. ஆண்டாள் திருப்பாவையில் மூன்று இடங்களில் கூறியுள்ளார். ஆதிசங்கரரும், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே, என்று மூன்று முறை கூறுகிறார்.எந்த ஒன்றையும் மூன்று முறை குறிப்பிட்டால் அது சாசுவதமானது. நிரந்தரமானது எனப்பொருள். மஹா பெரியவர், அவதாரங்களில் பரிபூரணஅவதாரம் கிருஷ்ணாவதாரம், என்றார். கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரன். ஆபத்பாந்தவன், தர்மபிரபு மட்டுமின்றி பீஷ்மருக்கு முக்தி தந்தவன் என பல காரியங்களை செய்தவன் என கூறியுள்ளார் மஹா பெரியவர், என்றார்.ஸத் சங்கம் செயலாளர் ஸ்ரீராமன் வரவேற்றார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு செய்துஇருந்தார்.