பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
அரூர்: அரூர் அடுத்த குடுமியாம்பட்டியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, முயல் விடும் விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, முயல் விடும் நிகழ்ச்சிக்காக, நேற்று காலை, 10:00 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமியை வழிபட்டனர். பின், வலைகளை எடுத்துக்கொண்டு, வனப்பகுதிக்கு சென்று முயலை பிடித்து வந்தனர். மாலை, 4:30 மணிக்கு, கோவில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பின், பெரிய மாரியம்மன், வேடியப்பன் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய, மூன்று சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, வனத்தில் பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்தனர். பின், சுவாமியை சுற்றி மூன்று முறை வலம் வந்த பின், சிறிது தூரம் சென்று முயலை விட்டனர். அது வனப்பகுதியை நோக்கி ஓடியது. விழாவில், கீரைப்பட்டி, அச்சல்வாடி, ஓடசல்பட்டி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில், கடந்த, மூன்று தலைமுறைகளுக்கு மேலாக, முயல் விடும் விழா நடந்து வருகிறது. விழாவின் போது, விடப்படும் முயலை யாராவது பிடித்தால், அவர்களுக்கு ஊர் பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்படும். ஊர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க, பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றனர்.