மதுரை : ஆதரவற்ற தெரு நாய்கள், மாடுகளுக்கு 10 ஆண்டுகளாக உணவளித்து, ஜீவகாருண்ய சேவையில் ஈடுபடுவதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது, என்கிறார் மதுரை தவிட்டு சந்தைவர்த்தகர் ஏ.வி.அசோக். அவர் கூறியதாவது: தெருவோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு எப்படியாவது உணவு கிடைக்கும். சமூக பிராணி எனப்படும் தெரு நாய்களுக்கு தேவையான உணவு கிடைக்காதது வேதனைதந்தது. அதனால் உணவு வழங்கும் சேவையை துவங்கினேன். தினமும் 5 படி அரிசி, சிக்கன் வாங்கி மஞ்சள் கலந்து பிரியாணி சமைத்து உதவியாளர்களுடன் இரவில் தெரு நாய்களைதேடி பசியாற்றுகிறேன். இதற்காக தினமும் ரூ.1000 செலவிடுகிறேன். நாய்களுக்கு சமைக்க தனி பாத்திரங்கள் உள்ளன. ஆனால் எங்கள் சமையல் அறையிலயே சமையல் கலைஞர் மூலம் சமைக்கிறேன். தவிட்டுச்சந்தை, மகால் வடம்போக்கி தெரு, முனிச்சாலை, தெற்குவாசல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று உணவளித்த பின்தான் வீட்டிற்கு வந்து சாப்பிடுவேன். நோய் மற்றும் அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சையும் அளிக்கிறேன். இத்துடன் வேறு பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறேன், என்றார்.