பதிவு செய்த நாள்
21
ஜன
2021
05:01
திருப்பூர் : ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து டிச., வரையில், எவ்வித விழாக்களும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதி வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்புதலுடன், தைப்பூச தேர்த்திருவிழா கொண்டாட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், காங்கயம் - சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூன்று நாட்கள் நடக்கும் தேரோட்டம், இந்தாண்டு ஒரு நாள் மட்டும் நடக்கிறது. கொடியேற்றம், தினசரி வாகன காட்சி, திருவீதியுலா நிகழ்வுகளுடன், 28ம் தேதி ஒரு நாள் மட்டும் தேரோட்டம் நடக்க உள்ளது.l ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. தினமும், காலை, மாலை வழிபாடுகள் நடந்து வரும். வரும், 28ம் தேதி அடிவாரத்தில் தேரோட்டமும், 31ம் தேதி மலை மீதும் தேரோட்டம் நடத்த, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், இன்று கிராமசாந்தியும், நாளை தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றமும் நடக்கிறது. மயில்வாகன காட்சி, சுவாமி கிரிவல காட்சிகள் தினமும் நடக்கும்; 27 ம் தேதி திருக்கல்யாணமும், 28 ம் தேதி மாலை, தேரோட்டமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பரிவேட்டை, குதிரைவாகன பவனி, மகாதரிசனம் நடைபெறுகிறது. அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருகிறது. சுவாமி பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், இந்தாண்டு தைப்பூச தேரோட்டம் நடக்காது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.