பதிவு செய்த நாள்
30
ஜன
2021
10:01
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஒற்றுமையை போற்றும் வகையில், நிலாச்சோறு வைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
நாகரிக உலகில், கிராமிய கலைகளை போற்றவும்; நல்ல பழக்க வழக்கங்களை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், கலைகள் போற்றி பாதுகாக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில், பொள்ளாச்சி ஜோதி நகர், சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், நிலாச்சோறு வைத்து வழிபாடு செய்து ஒற்றுமையை போற்றி உணவு உட்கொண்ட விதம் பார்வையாளர்களை கவர்ந்தது.சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் கடந்த, 10 நாட்களாக நிலாச்சோறு கும்மி பாட்டு பாடி வருகின்றனர். அதில், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையான உணவு கொண்டு வந்து பொது இடத்தில், பெண்கள் கும்மி அடித்து பாட்டு பாடி மகிழ்வர். அந்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சக்தி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சக்திவேல் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடந்தது. சேவாலயம் செயலாளர் ஞானசேகர், நிலாச்சோறு, கும்மிபாட்டு சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். மகா சித்தர் அகத்தியர் பேரவை நிர்வாகிகள் ஹரிராஜ், சிவசுப்ரமணியம் பங்கேற்றனர்.மக்கள் கூறுகையில், ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் நிலாச்சோறு, கும்மிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. விவசாயம் செழிக்க வேண்டும், என வழிபாடு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம், என்றனர்.