ஆற்றுகால் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு: கேரள அரசு முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2021 10:01
நாகர்கோவில்: சபரிமலையை போன்று ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவுக்கும் ஆன்லைன் முன்பதிவு முறையை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால் அரசு திணறி வருகிறது. சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவில் தினமும் ஆயிரம் துவங்கிய ஐந்தாயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். தேவசம்போர்டு வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 250 கோடி குறைந்தது. சபரிமலை போன்று ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவுக்கு அதிக அளவில் பெண்கள் கூடுவார்கள். இங்கு பிப்.,19 ல் விழா தொடங்கி 27 பொங்கல் விழா நடைபெறுகிறது.
விழா குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பொங்கல் விழாவுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பொங்கல் வைப்பதற்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு அனுமதி என்பது பற்றி ஒரிரு நாளில் முடிவு செய்யப்படுகிறது. பொது இடங்களில் பொங்கல் வைக்க அனுமதி கிடையாது என்றும், அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.