பதிவு செய்த நாள்
30
ஜன
2021
10:01
லாகூர் : பாகிஸ்தானில், 126 ஆண்டு கால பழமையான சிவன் கோவில், நேற்று(ஜன.,29) மீண்டும் திறக்கப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 75 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்து மத மக்கள், வசித்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர், சிந்து மாகாணத்தை சேர்ந்தோர். இங்கு, ஹிந்து மதத்தினருக்காக, பல கோவில்கள் உள்ளன.இந்நிலையில், இந்த மாகாணத்தில், பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த, 126 ஆண்டுகால பழமையான சிவன் கோவில், நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து, இ.டி.பி.பி., எனப்படும், பாக்.,கில் உள்ள சிறுபான்மையின சமூக மக்களின் வழிபாட்டுத் தலங்களை பேணி பாதுகாக்கும் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் அமிர் ஹாஷ்மி கூறியதாவது: சிந்து மாகாணத்தின் ஐதராபாதில், 126 ஆண்டுகால பழமையான, கோஸ்வாமி பர்ஷுதம் கர் நிஹால் கர் என்ற சிவன் கோவில், புனரமைக்கப்பட்டு, பக்தர்களுக்காக தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள நிலங்களையும் சேர்த்து, இந்த கோவிலின் வளாகம் விரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, கோவிலுக்குள், ஹிந்து மக்கள், மிகவும் வசதியாக வழிபாடுகளில் ஈடுபடலாம். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூர் ஹிந்து அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.