தேனி:சிருங்கேரி சாரதா பீட பாரதீதீர்த்த சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வேதபுரீ தட்ஷிணாமூர்த்தி ஆசிரமத்திற்கு வந்தார். ஆசிரம நிறுவனர் ஓங்காரனந்தாசுவாமிகள் தலைமையில், அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமிகள் அன்னப்பறவை அலங்கார வாகனத்தில் ஆசிரமத்தை சுற்றிப்பார்த்தார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமியை வரவேற்று ஓங்காரனந்தாசுவாமிகள் தலைமையிலான குழுவினர் பேசினர். பின்னர் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். பின்னர் சிருங்கேரி மடத்தின் புத்தகங்கள், சி.டி.,க்கள் வெளியிடப்பட்டன. நேற்று காலை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 7 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை நடந்தது. 9.30 மணிக்கு பக்தர்கள் ஜகத்குருவை தரிசனம் செய்தனர்.பாரதீதீர்த்த வித்யார்த்த விலாசத்திற்கு பாரதீதீர்த்தசுவாமிகள் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பிக்ஷாவந்தனம் நடந்தது. பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கினார். பக்தர்கள் சுவாமிக்கு பாதபூஜை நிகழ்ச்சிகள் நடத்தினர். பூஜையிலும், மஹாசுவாமிகள் தரிசனத்திலும் ஓங்காரனந்தா சுவாமிகள், பரமார்த்தானந்தாசுவாமிகள், சத்ஸ்வரூபானந்தா சுவாமிகள், நித்யானந்தகிரி தபோவனம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஆசிரம நிகழ்ச்சிகள் அனைத்திலும் பக்தர்கள் அனைவரும் கலாச்சார உடையில் பங்கேற்றனர்.