பதிவு செய்த நாள்
04
ஜன
2026
12:01
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம்நேற்று 19வது பாசுரம் குறித்து நிகழ்த்திய உபன்யாசம்:
இப்பாசுரத்தில், குத்து விளக்கெரிய என்பது ஞானம் பெருகுவதை சொல்கிறது. ஞானம் மிகுந்தால் தான் பகவதனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தத்துவார்த்தமாக, ஆத்மா ஞானம் உடையது என்பதால், ஆத்மாவையும் விளக்கு என்று கொள்ளலாம்.
தத்துவார்த்தமாகப் பொருள் அனுபவித்தால், குத்து விளக்கு ஒரு விளக்கு தான். ஆனால்ஐந்து முகங்கள் உண்டு. ஐந்து முகங்கள், பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை என்ற எம்பெருமானின் ஐந்து நிலைகளை குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.
குத்து விளக்கின் ஐந்து முகங்களும் ஏற்றப்பட்டு மேல் நோக்கி தீபம் எரியும் போது, இது பூர்ணமான விளக்காகிறது.
மேல் நோக்கி எரியும் ஜோதியானது, நடுவில் இருக்கும் ஒரு கோபுரம் போன்ற இடத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. இந்த மையப் பகுதி தான் நம் ஆத்மா. விளக்கின் ஐந்து முகங்கள் 5 இந்திரியங்கள்.
இந்த ஆத்மா உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்து முகங்களான பஞ்ச இந்திரியங்களால் முயற்சிக்கிறது.
ஆத்மாவை சுற்றி இருக்கும் இடத்துக்கும் இந்த ஐந்து ஜோதியால் ஓரளவு வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் ஆத்மாவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆத்ம ஞானம் உண்டாக வேறு ஒரு ஜ்ஞான விளக்கை நாம் நாட வேண்டும்.
அந்த ஜ்ஞான விளக்கு தான் பரமாத்மாவான எம்பெருமான்.எனவே, குத்து விளக்கு எரிதல் என்பது ஐஸ்வர்யத்தை சொல்கிறது.
நந்தா விளக்கு, நம் மணி விளக்கு, பகவான் என்ற ஐஸ்வர்யமாகிய ஜ்ஞான விளக்கைக் குறிக்கிறது.கண்ணன் அனைவருக்கும் சொந்தம் என்று பக்தியால் முதன் முதலில் பொதுவுடமை சித்தாந்தம் பேசி, தனக்கு மட்டுமே கண்ணன் என்பது போல் இருப்பது உன் தகுதிக்கும் தன்மைக்கும் தகுமோ என்று நப்பின்னையிடம் பக்திப் போர் தொடுத்தவள் ஆண்டாள் என்றும் அனுபவிக்கலாம், என்றார்.