உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
சிவபெருமான் திருவதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். அந்த நாளில் தான் நிஜ ரூபத்தில் காண முடியும். மற்ற நாட்களில் லிங்க வடிவில் தான் காட்சியளிப்பார். ஆண்டு முழுவதும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு நடைபெறும். மற்ற நாட்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் இருக்காது .
நேற்று காளாத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் வெள்ளி கவசத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்திலும் காட்சி அளித்தார். அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளாக பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்றனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் ரத வீதிகளில் உலா வந்தார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தரிசனம் செய்தனர். அர்ச்சகர் மணிவாசகம், முத்துப் பாண்டி ஆகியோர் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில்களும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம். தீபாராதனைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். அதிகாலையில் சுவாமி நகர் வலத்துடன் திருப்புகழ் சபையை சேர்ந்த பெண்கள் பஜனை பாடினர். ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர ஆவடையம்மாள் கழுவன் செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர். திருவாதிரை களி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரின் தரிசனம் பெற்றனர். போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்சம் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், எஸ்.எஸ்.புரம் பார்வதி, பரமசிவன், வீருசின்னம்மாள் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.