பதிவு செய்த நாள்
03
பிப்
2021
02:02
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப் பூசத்தையொட்டி, தெப்ப உற்சவம் நடந்தது. இக்கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. மேலும், சிறப்பு வழிபாடும், புலி வாகனம், பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்தது. கடந்த, 28ல், காலை, 8:00 மணிக்கு, பால்குட ஊர்வலம் இரவு, 9:00 மணிக்கு சுப்பிர மணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 29ல், இரவு, 7:00 மணிக்கு விநாயகர் தேரோட்டம் மற்றும், 9:00 மணிக்கு யானை வாகன உற்சவம், பொன்மயில் வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. கடந்த, 30ல், காலை, 9:00 மணிக்கு மகளிர் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 31ல், வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், நேற்று முன்தினம் கொடியிறக்கம் மற்றும் இரவு, 10:00 மணிக்கு, தெப்ப உற்சவமும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.