பதிவு செய்த நாள்
08
பிப்
2021
07:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில், மாசிமக தேர் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய, தமிழக முதல்வர் பழனிசாமிக்கும், மாவட்ட கலெக்டருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர் திருவிழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, சுவாமி தரிசனம் செய்ய வந்த, தமிழக முதல்வர் பழனிசாமியிடமும், மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடமும், தேர்த் திருவிழாவை நடத்த, அனுமதி வழங்கும்படி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பரிசோதனை செய்த முதல்வர் பழனிசாமி, தேர்த் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத்தேர் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம், கோவிலில் நடந்தது. கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர் விஜயலட்சுமி, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர் சுதர்சன், ஸ்ரீதர் மற்றும் மிராசுதாரர்கள், இந்து அமைப்பினர், சமுதாய மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் பழனிசாமிக்கும், மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இம்மாதம், 20 ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கி, மார்ச் மாதம் 3 ஆம் தேதி வரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 21 ஆம் தேதி கொடியேற்றமும், 25 ல் அம்மன் அழைப்பும், 26 ல் திருக்கல்யாணம் உற்சவமும், 27 ல் மாசி மகத் தேரோட்டமும், 28 ஆம் தேதி பந்த சேவை, குதிரை வாகனத்தில் பரிவேட்டை, மார்ச் 1 ஆம் தேதி தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டன.
விழாக்காலத்தில் பந்த சேவை, தண்ணீர் சேவை எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்தவும், மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும், தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில், விரிவான போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் எனவும், நகரை தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.