பதிவு செய்த நாள்
12
பிப்
2021
10:02
மதுரை:சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு மாட வீதியில், மந்த்ராலய மடம் துவக்கப்பட்டுள்ளது. மந்த்ராலய வேதசபா நிகழ்ச்சியை, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து அருளுரையாற்றினார்.
மந்த்ராலய மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர், அழகிய மணவாள ஜீயர், வேத பண்டிதர்கள், வரதராஜ சுவாமி கோவில் பட்டாச்சார்யார்கள் பங்கேற்றனர். சுபுதேந்திர தீர்த்தர் பேசியதாவது: கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமமானது போன்று இங்கு சைவம், வைணவம், மாத்வம் ஆகிய மூன்று சம்பிரதாயங்கள் சங்கமமாகி உள்ளன.
வேதம் படித்தவர்களை நாம் போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும். மந்திரம், கோவில் போன்றவை நம் கலாசாரத்தின் முக்கிய அங்கங்கள்; அவற்றை வளர்க்க வேண்டும். எத்தனை கட்டடங்கள் கட்டியுள்ளோம், எவ்வளவு செல்வம் சேர்த்துள்ளோம் என்பது முன்னேற்றத்திற்கான அளவுகோல் அல்ல. கலாசாரத்தை எவ்வளவு கடைப்பிடிக்கிறோம், வேதத்தில் எவ்வளவு கற்றுள்ளோம் என்பதே முன்னேற்றம். வேத தர்மத்தை காப்பது நம் கடமை.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ரிக் வேதத்தின் விக்ருதிபாதம், யஜுர் வேதத்தின் லட்சண பாதம் குறித்து விளக்கினார். சுவாமிகள் சுற்றுப்பயணம்விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்., 13, 14ல் சென்னை குரோம்பேட்டை சங்கர்லால் ஜெயின் தெருவில் உள்ள வேத பாடசாலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். பிப்., 15ல் திண்டிவனம் ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளிக்கும், மறுநாள் திருவானைக்கோவில் சங்கர மடம் வித்யாஸ்தானத்திற்கும் விஜயம் செய்கிறார். பிப்., 17, 18ல் சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் உள்ள சங்கர மடத்திலும், பிப்., 19 முதல், 25 வரை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்கர மடத்திலும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.