பதிவு செய்த நாள்
04
ஜூன்
2012
11:06
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், சிறப்பு தரிசனம் வரிசையில் நின்றிருந்தவர்கள், மின்அதிர்வை உணர்ந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இக்கோயிலில், வைகாசி விசாகத்தையொட்டி, ரூ.50 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான வழியில் செல்ல, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஆளுயர ஸ்டாண்ட் மின்விசிறி யாருக்கும் பயன்படாமல், சுவர் பக்கம் இயங்கிக்கொண்டிருந்தது. இதை கவனித்த பக்தர் ஒருவர், அதை தன் பக்கம் திருப்ப, எதிர்பாராவிதமாக அந்த மின்விசிறி இரும்பு தடுப்புகளில் மீது விழுந்தது. மின்விசிறியில் இருந்து மின்சாரம் இரும்பு தடுப்பில் பாய்ந்ததால், பக்தர்கள் சிலருக்கு மின்அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே மின் தடை ஏற்பட்டு விட்டது. இதனால், பதட்டமடைந்த பக்தர்கள், தப்பி ஓட முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கோவையைச் சேர்ந்த பத்மாவதி, நடராஜன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். பின், கோயில் வாசலை பக்தர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், மின்அதிர்ச்சி குறித்து, கோயில் நிர்வாகம், ஊழியர்களிடமும் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை, என்றனர். கோயில் துணைகமிஷனர் செந்தில்வேலன் கூறுகையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஓடியதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது, என்ற அவரிடம், கோயில் ஊழியர் ஒருவர், மனம் நோகும்படி பேசியதாக பக்தர்கள் கூறுகிறார்களே, என கேட்டதற்கு, ஊழியர் கூறியிருக்க வாய்ப்பில்லை. நம்பாத பட்சத்தில் அடையாள அணிவகுப்பு கூட நடத்திக் காட்ட தயார், என்றார்.