திருக்கோவிலூர்: அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார பாதயாத்திரை குழுவினர் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.
நதியை நம் முன்னோர்கள் புனிதமாகவும், தாயாகவும், பண்பாட்டின் அடையாளமாகவும் கருதி பாதுகாத்து வந்தனர். நாகரீக உலகில் கழிவுகளை வெளியேற்றும் இடமாகவும், குப்பைகளை கொட்டும் மையமாகவும், மணல் மாபியாக்களின் கூடாரமாகவும் குறிப்பாக தென்பெண்ணையாறு மாறி வருகிறது. இதன் காரணமாக நதி மாசுபட்டு, நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளது. நதியை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் தென்பெண்ணை நதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார பாதையாத்திரை என்ற பெயரில் பயணத்தை கடந்த மாதம் 31ம் தேதி தென்பெண்ணை உருவாகும் கர்நாடக மாநிலம், நந்தி மலையில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூர் வழியாக வரும் 25ம் தேதி கடலூரில் தென்பெண்ணை சங்கமிக்கும் வங்கக் கடலை சென்றடை கின்றனர்.
திருக்கோவிலூர் வந்த இக்குழுவினருக்கு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதையாத்திரை தலைவர் மேலமங்கலம் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் சுவாமி காளீஸ்வரானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தென்பெண்ணையில் மாலை 6:30 மணி அளவில் நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.