பதிவு செய்த நாள்
22
பிப்
2021
05:02
மைசூரு : கடவுள், வழிபாடுகள், ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தான் பிறந்த ஊரில் ராமர் கோவில் கட்டி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுவதை வைத்து, அவர் நாத்திகர் என்றே பலரும் கருதினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்க முடியாது என கூறி, சலசலப்பை ஏற்படுத்தியவர். இப்படிப்பட்டவர், தன் சொந்த ஊரில், ராமர் கோவில் கட்டுவதன் மூலம், தானும் ஆஸ்திகர் தான் என நிருபித்துள்ளார்.முந்தைய சட்டசபை தேர்தலுக்கு பின், சித்தராமையா, தான் பிறந்த ஊரான மைசூரின், சித்தராமஹுன்டிக்கு, மனைவியுடன் வந்திருந்தார். கிராமத்தின் ஒக்கலிகர் வீதியில் ராமர் கோவில் சிதிலமடைந்திருப்பதை கண்டு, அதை புதிதாக கட்டித் தருவதாக நம்பிக்கையளித்தார்.
இதன்படி, 2019ல், அந்த கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கட்டத் துவங்கினர். கோவில் கட்டும் பணிகளை, சித்தராமையா மனைவி பார்வதம்மா, மேற்பார்வையிடுகிறார். பணிகள் முடியும் கட்டத்துக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.அழகான கோபுரம், கர்ப்பகுடி, பிரார்த்தனை இடம், வாகனங்கள் பார்க்கிங் என, அனைத்து வசதிகளுடன் சிறப்பான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.