பதிவு செய்த நாள்
23
பிப்
2021
01:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கருவறையில், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்தார்.
பிப்., 18ல் ராமேஸ்வரம் வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். கோவிலில், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.கருவறைக்குள் சென்ற விஜயேந்திரர், காஞ்சி மடத்தின் சார்பில், 13 கிலோ வெள்ளி குடம், 10 கலசம், 2 பூஜை வாளி, ஒரு கமல கிண்ணம், ஏழு கிளை கொண்ட ஒரு கற்பூர தீப தட்டு, 108 தங்க காசுடன் ஒரு அடி நீளத்தில் மாலை, 3 அடி நீளத்தில் தங்க வில்வ இலை மாலை.மரகத கல் மற்றும் மூன்று வில்வ இலையுடன் தங்க செயின், தங்கம் மற்றும் வெள்ளி பூணுால் ஆகியவற்றை ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்தார். பின், இந்த ஆபரணங்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதன் மதிப்பு, 35 லட்சம் ரூபாய் என காஞ்சி மடம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.முன்னதாக, கருவறைக்குள் விஜயேந்திரர் செல்ல, அர்ச்சகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உத்தரவை அடுத்து, அவர்கள் அமைதியாகினர்.