விழுப்புரம்; விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் மயானகொள்ளை உற்சவம் நடைபெற்றது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மயானக்கொள்ளை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12.00 மணிக்கு மேல், மயான காளியாக அங்காளம்மன் மயானத்தில் எழுந்தருளினார்.பக்தர்கள் அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் வேடமணிந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மயானம் சென்று பூஜை செய்தனர். பின்னர் பக்தர்கள் காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை கொள்ளை விட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது.