பதிவு செய்த நாள்
24
பிப்
2021
10:02
கோவை: கோவை ராம்நகர், ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஜீர்ணோத்தாரன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
ராம் நகரில், 1933ம் ஆண்டு கோவில் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின், 75 ஆண்டுகள் கழித்து, கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு, இரண்டாவது முறையாக 2008ம் ஆண்டு பிப்., 18ல், மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் பிரதானமாக அமைந்துள்ள ராஜகோபுரத்துக்கு, சுதை வேலை பார்த்து, வண்ணச்சாந்து பூசி, அழகு மிளிர காட்சியளிக்கிறது.
கோபுர கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்ரீ சீதாலட்சுமண சமேத கோதண்டராமர், ஸ்ரீவிநாயகர் சன்னிதி, ஸ்ரீநவக்கிரஹ சன்னிதி, ஸ்ரீவில்வலிங்கேஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதிகளில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. அந்தந்த சன்னதிகளின் கருவறையின் மேற்பகுதியில் கும்பஸ்தாபனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சன்னதிகளின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், மேற்பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளன.தெற்கு பார்த்து ஐந்து நிலைகளில் கோபுரம் அமைந்துள்ளது. கோபுர வாயிலுக்கு வடக்கில் கொடிமரமும், அதை கடந்து, தெற்கு பார்த்து சீதா லட்சுமண சமேத கோதண்டராமராக காட்சியளிக்கிறார்.கிழக்கு பார்த்து ஸ்ரீ விநாயகர் சன்னதியும், அதற்கு அருகே, வடக்கு பார்த்து ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது. வடகிழக்கில் நவக்கிரஹ சன்னதி அமைந்துள்ளது.ராமர் சன்னிதிக்கு பின் பகுதியில் கிழக்கு பார்த்து ஸ்ரீ வில்வலிங்கேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த இந்த சன்னதிகளுக்கு கிழக்கு பகுதியில், அபிநவ வித்யாதீர்த்த பிரவசன்ன மண்டபம் அமைந்துள்ளன. இங்கு கோவில் சார்பில் நாட்டியம், நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபத்துக்கு தெற்கே கோவில் அலுவலகமும், தென் கிழக்கில் மடப்பள்ளி அறையும் அமைந்துள்ளன. கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அன்றாடம் ஒலிக்கும் சதுர்வேத பாராயணம்: கோதண்டராமருக்கு மூன்றாவது முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, பிப், 21ல், காலை 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது முதல், அன்றாடம் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் அடங்கிய சதுர்வேத பாராயணம் மற்றும் சுந்தர காண்ட பாராயணம், ருத்ரபாராயணம், சர்வமூல கிரந்த பாராயணம், நாலாயிரதிவ்யபிரபந்த பாராயணம், திருப்பல்லாண்டு ஆகியவை வேதவிற்பன்னர்களால் பாராயணம் செய்யப்பட்டது.கோதண்டராமர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வில்வலிங்கேஸ்வருக்கு பிரதோஷ காலத்தில் பக்தர்களே பாலாபிஷேகம் செய்யும் பாக்யத்தை கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது. அதனால், பிரதோஷ காலத்தில் வழிபட வரும் பக்தர்கள், தங்களது கரங்களில் வில்வலிங்கேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.நித்ய கணபதி ஹோமம்ராமர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு, அன்றாடம் மகாகணபதி ஹோமம் சிவாச்சாரியர்களால் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பலரும் அதிகாலை வருகை தருகின்றனர். வழிபாடு நிறைவடைந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீ மகாசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறும்.ஸ்ரீ ராம நவமிக்கு பிரம்மோற்சவ விழாஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமி விழாவில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளுவார். பத்து நாட்களும் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆன்மிக நடனங்களும் நடைபெறும். இவ்விழா நாட்களில் ராம்நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனாஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 படித்து அரசு பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு, தேர்வு காலத்தில் ராமர் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனாவும், கூத்தனுார் சரஸ்வதி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட சரஸ்வதி தேவியின் படமும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வு பயம் போக்குவதற்காக ஹயக்கிரீவர் ஹோமங்களும் தேர்வு காலத்தில் நடத்தப்படுகிறது.