பதிவு செய்த நாள்
24
பிப்
2021
12:02
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வீதியுலா வந்த விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு, பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் (22ம் தேதி) ஆறாம் நாள் உற்சவமாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, பெரிய நாயகர் காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
அன்று பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், கயிலை வாத்தியங்கள் முழங்க, கிழக்கு கோபுர வாயிலை திறந்து, விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மதியம் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள், நேற்று மதியம் 2:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர். சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு செய்து, உற்சவ மூர்த்திகளை கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.