பதிவு செய்த நாள்
24
பிப்
2021
12:02
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி சங்கீத உற்ஸவம் நடந்தது.
நடப்பாண்டு, 107-வது ஏகாதசி உற்ஸவ கொடியேற்றம், பிப்., 19 மாலை, கோவில் தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் நடந்தது.ஏகாதசி உற்ஸவத்தின் முக்கிய நாளான நேற்று, காலை 8.30 மணி தியாகராஜ பாகவதரை நினைவூட்டும் வகையில் உஞ்சவிருத்தி நடந்தது. இசைக் கலைஞர்கள் மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி, சுகுமாரி நரேந்திர மேனன், குழல்மன்னம் ராதாகிருஷ்ணன், சுசீலா ஆகியோரின் தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது.
தொடர்ந்து, 11 மணியவில் செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும், பிரபல இசைக் கலைஞருமான ஜேசுதாஸ், காணொளி வாயிலாக சங்கீத ஆராதனை நடத்தினார். மகாதேவா சர்மா - வயலின், ஹரி -- மிருதங்கம், ராதாகிருஷ்ணன் - கடம், பரவூர் ராதாகிருஷ்ணன் - தம்புரா வாசித்தனர்.மாலை 7:00 மணிக்கு இசை கலைஞர் விஜயனின் சங்கீதக் கச்சேரி நடந்தது.இன்று நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன், ஐந்து நாள் உற்ஸவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, செம்பை சீனிவாசன், செம்பை சுரேஷ் செய்தனர்.