பதிவு செய்த நாள்
03
மார்
2021
06:03
மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 81வது பிறந்த நாளையொட்டி, 1,200 பேருக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிறப்பு அபிஷேகம்: செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளாரின், 81வது பிறந்த நாள் விழாவையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அரங்கில், அடிகளார் பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நடந்தது.
பங்காரு அடிகளார், பிறந்த நாள் விழா மலரை, மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் வெளியிட்டார். பின், பங்காரு அடிகளார், அரசு மருத்துவமவைக்கு, அவசர ஊர்தி, அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான், 134 பேருக்கு மடிக்கணினி, 114 பேருக்கு சைக்கிள், 33 பேருக்கு மருத்துவ சிகிச்சை என, பல்வேறு நலத்திட்ட உதவிகள், 1,200 பேருக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கியும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பக்தர்களின் பயன்பாட்டிற்காக தலா, 16 கழிப்பறை, குளியலறைகள் கட்டித் தரப்பட்டதை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.பிறந்த நாள் விழா விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், சேலம், நாமக்கல் மாவட்டங்களின், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். இன்று, 3ம் தேதி, பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா நடக்கிறது.