பதிவு செய்த நாள்
03
மார்
2021
06:03
தாம்பரம்:மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில், புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், பழமை வாய்ந்த, தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.தொல்லியல் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. நவக்கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள, சரபேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால், தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
கோவிலின் கும்பாபிஷேகப் பணிக்காக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாலாலயம் செய்யப் பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில் புனரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், புனரமைப்பு பணிகளை, துரித கதியில் செய்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறியதாவது: கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. தவிர, கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டு, பிரம்மோற்சவம் மற்றும் தெப்போற்சவம் இரண்டும் நடக்கவில்லை. இன்னும் கும்பாபிஷேகம் நடக்காததால், இந்த ஆண்டும் பிரம்மோற்சவம் நடக்க வாய்ப்பில்லை. இது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைந்து பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இணைந்து, பணிகளை விரைந்து முடித்தால், கும்பாபிஷேகமும் விரைவில் நடத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிலையில், தொல்லியல் துறை சார்பில் செய்யப்பட வேண்டிய சில பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், புனரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவிலில் உள்ள சிலைகளுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பணிகள் நடந்து வருவதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில், இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, இரு துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.