ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2021 02:03
ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார். தொடர்ந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே அமைந்துள்ளது ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோயில். இக்கோயி லில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நேற்று மாலை ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார். அவருக்கு ஸ்ரீ சேத்திர ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சேத்திர ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மஹா ஸ்வாமிகளை சந்தித்தார். தொடர்ந்து சுவாமிகள் இருவரும் கோவிலுக்கு எழுந்தருளி ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகள் இருவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா ஆலோசனையின்படி திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் செய்திருந்தார். கோவில் அறங்காவலர் ஜெகநாதன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன் மற்றும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி ஸ்ரீகோதண்டராமர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமிகளை தரிசனம் செய்து திருவருளும், குருவருளும் பெற்றனர்.