பதிவு செய்த நாள்
05
மார்
2021
05:03
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் உள்ள, பழமை வாய்ந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலத்திற்கு அருகிலுள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழமன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.கற்றளி முறையில் அமைக்கப்பட்ட இந்த கோவில், கட்டடக்கலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. நான்கு புறமும் நீர் தேங்கி நிற்கும் வகையில், அகழி ஏற்படுத்தி அதற்கு மத்தியில் கோவில் கருவறை கட்டப்பட்டுள்ளது.இதோடு அகழியின் ஓரத்தில் உள்ள சதுரமான வராண்டாவில், 200க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில், கட்டமைப்பு உள்ளது. அன்றைய கால வாழ்க்கை முறை குறித்த கல்வெட்டுகளும், கோவில் சுவற்றில் உள்ளன.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றில் நீர்வரத்து உள்ள போது, இந்த அகழியில் நீர்தேங்கும் அமைப்பு கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க கோவில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டிக்கிடப்பதால், மிகவும் பாழடைந்துள்ளது.இது தவிர கோவில் வாசலில் குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளன. இந்த கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.