பதிவு செய்த நாள்
05
மார்
2021
06:03
கரூர்: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும், 7ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திரு விழாவையொட்டி, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை, பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், 7ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அன்று அதிகாலை விநாயகர் பூஜையுடன் விழா துவங்கி, காலை, 7:00 மணி முதல், 8:30 மணிக்குள் மீன லக்கனத்தில், அம்மனுக்கு காப்பு கட்டுதல் தொடங்கி, பூச்சொரிதல் விழா நடக்கிறது.தொடர்ந்து, அன்று மாலை திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்கார வண்டிகளில், பூக்களை கொண்டு சென்று, சமயபுரம் அம்மனுக்கு செலுத்தி, நேர்த்திக்கடனை முடிப்பர். மேலும், மாசி மாத கடைசி ஞாயிறுக்கிழமை முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை, அம்மன் பச்சை பட்டினி விரதம் வரும், 7ல் துவங்குகிறது. அன்று முதல், 28 நாட்களுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.