பதிவு செய்த நாள்
09
மார்
2021
04:03
மேட்டுப்பாளையம்: மாசிமக தேர் திருவிழா முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த அரங்கநாத பெருமாள், விழா நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமக தேர் திருவிழா, கடந்த மாதம், 20 ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், அரங்கநாத பெருமாள், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு திருக்கல்யாண உற்சவமும், தேரோட்டமும், குதிரை வாகனத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் நடந்தன. கடந்த,3 ம் தேதி வசந்தம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இந்நிலையில் கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்தபன திருமஞ்சனம், புண்ணிய வாசனம் ஆகியவை நடந்தன. அதைத்தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில், அரங்கநாத பெருமாள், கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து விழா நாட்களில், கடந்த, 17 நாட்களாக, திருமண மண்டபத்தில் எழுந்தருளியிருந்த அரங்கநாத பெருமாள், மீண்டும் ஆஸ்தானம் சென்று அங்கு எழுந்தருளினார். இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச ஸ்ரீதர் பட்டர், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.