பதிவு செய்த நாள்
09
மார்
2021
05:03
தஞ்சாவூர் : கும்பகோணத்தில் உள்ள சங்கர மடத்தில், 52 ஆண்டுகளுக்கு பின், காஞ்சி விஜயேந்திரர் நடத்தும் மஹாசிவராத்திரி பூஜை வரும், 11ம் தேதி நடக்கிறது.
கடந்த, 1969ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்தபோது, சங்கர மடத்தில் முகாமிட்டு, மஹா சிவராத்திரி பூஜையை நடத்தினார்.இந்நிலையில், சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த, 3ம் தேதி கும்பகோணம் வந்து, அன்று முதல் வரும், 14ம் தேதி வரை, சங்கர மடத்தில் தங்கி பூஜைகளை நடத்தி வருகிறார்.வரும், 11ம் தேதி சிவராத்திரி என்பதால், அன்றைய தினம், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மடத்தில் நான்கு கால பூஜை நடத்துகிறார்.
கடந்த, 52 ஆண்டுகளுக்குப் பின், கும்பகோணம் மடத்தில், சங்கராச்சாரியார் சிவராத்திரி பூஜையை நடத்துவதால், விரிவான ஏற்பாடுகளை, மடத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.இன்று ஜெயந்தி விழாவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. கும்பகோணம் மடத்தில் காலை, மாலை வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இன்று காலை, ஏகாதசருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு மஹாபிஷேகமும், மாலை, 4:30 மணிக்கு, ரெட்டிராயர் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீராம மந்திரத்தில் ஆச்சார்ய சுவாமிகளுக்கு, 108 தங்க காசுகளால் ஸ்வர்ணபாத பூஜை, புஷ்பாஞ்சலி நடக்கிறது.