பதிவு செய்த நாள்
09
மார்
2021
05:03
உடுமலை:உடுமலை திருமூர்த்திமலையில், நாளை சிவராத்திரி விழா துவங்குகிறது; இந்தாண்டு கலை நிகழ்ச்சிகள் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும், மகா சிவராத்திரி விழா, நடந்து வருகிறது.இந்தாண்டு மாசி மகா சிவராத்திரி, நாளை மாலை, 6:00 மணிக்கு, பூலாங்கிணரிலிருந்து திருச்சப்பர ஊர்வலம் துவங்குகிறது. தானியங்கள், பழ வகைகள், விவசாய விளை பொருட்கள் கொண்ட சப்பரம் வேளாண் வளம் செழிக்க, வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள் வழியாக, வரும், 11ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, திருமூர்த்திமலை வந்தடைகிறது.இரவு, 8:00 மணிக்கு, புண்யாகவாசனம், முதல் கால யாக பூஜை, அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.இரவு, 10:00க்கு, இரண்டாம் கால பூஜை; 12ம் தேதி, அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடக்கிறது.அதிகாலை, 5:00 மணிக்கு, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் சோடச உபசார தீபாராதனை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், மகா சிவராத்திரிக்கு இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, இரவு முழுவதும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்குமாறு, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.