பதிவு செய்த நாள்
10
மார்
2021
12:03
ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப் பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல் குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன் பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக் கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப் பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.
அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்! என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன் பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப் பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும் உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில் சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல் போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன் இருந்தான்.
உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும் அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப் போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று, சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம் என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும் செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.