பதிவு செய்த நாள்
12
மார்
2021
05:03
நாமக்கல்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், நேற்று இரவு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இரவு, 7:00 மணியளவில் மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையுடன் துவங்கி, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு மூன்றாம் கால பூஜை, இன்று அதிகாலை நான்காம் கால பூஜை நடந்தது. பூஜையின்போது, சுவாமிக்கு, மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், தாமரைப்பூ, வில்வ இலையால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்யப்பட்டது.
* அதேபோல் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள என்.புதுப்பட்டி, வடக்கு மேட்டில் பிரசித்தி பெற்ற குபேர ஈஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிவ பூஜைகள் பெருவிழா நடந்தது. அதை முன்னிட்டு நேற்று மதியம், 1:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை அன்னதானம் நடந்தது.
* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை, சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்ட, 108 சங்கு பூஜை, காயத்திரி மந்திர ஹோமங்கள், நான்கு கால பூஜைகள் நடந்தன. கற்பக விநாயகர் சிவசுப்ரமணி நாடக சபா குழுவினரின், செங்காளியம்மன் சிறப்பு எனும் ஆன்மீக நாடகம் நடந்தது. குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், திருவள்ளுவர் நகர் கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், கத்தேரி மஞ்சுபாளையம் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.