பதிவு செய்த நாள்
13
மார்
2021
03:03
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு முதற்கால பூஜையும்; இரண்டாம் காலம், இரவு, 10:00 மணிக்கு அபிேஷக பூஜையும்; மூன்றாம் காலம் நள்ளிரவு, 1:00 மணிக்கும்; நான்காம் காலம் அதிகாலை, 4:30 மணிக்கும் நடைபெற்றது. நான்கு காலத்திலும், அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு காலத்துக்கும் இரண்டு விதமான சிறப்பு மலர்களை கொண்டும் வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், சிவராத்திரி விழாவையொட்டி, ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை, ஐந்து கால வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், தங்கக்கவச அலங்காரத்தில், ஜோதிலிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தேவம்பாடிவலசு அமணீஸ்வரர் கோவிலில், நான்கு கால பூஜை திருக்கைலாய வாத்தியத்துடன் நடந்தது. நேற்று காலை முதல், ஸ்ரீராமர் பஜனைக்குழுவின் பக்தி இசைக் கச்சேரியும் அன்னதானமும் நடந்தது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், சிவராத்திரிக்கு இரவு முழுக்க கண் விழித்து விரதமிருந்து, சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், சிவனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.
பச்சரிசி, திருமஞ்சனம், மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், எலும்பிச்சை, பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், நெய், கனிகள் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. விரதமிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவில், கொண்டம்பட்டி மல்லேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி வழிபாடு நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து துர்க்கை அம்மன், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி கண்விழித்து இறைவனை வழிபட்டனர்.உடுமலைகுடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, சிவாலயங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பழமை வாய்ந்த சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், அபிேஷக பூஜைகள் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, அமரபுயங்கீஸ்வரரை பக்தர் தரிசித்தனர். இதே போல், சுற்றுப்பகுதியிலுள்ள சிவன் கோவில்களிலும், சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன-- நிருபர் குழு -.