பதிவு செய்த நாள்
13
மார்
2021
03:03
உடுமலை:திருமூர்த்திமலை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மும்மூர்த்திகளின் விமானமாக, பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரம் நிறுவப்பட்டது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மகா சிவராத்திரியன்று, பூலாங்கிணர் கிராமத்தில், பச்சை மூங்கில், பாரம்பரிய மரங்கள் கொண்டு தயார் செய்யப்படும், திருச்சப்பரம், திருமூர்த்திமலை மும்மூர்த்திகளின், மூலவர் விமான கோபுரமாக நிறுவப்படுவது பல நுாறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வருகிறது.இந்தாண்டு, மாசி மகா சிவராத்திரிக்காக, நேற்றுமுன்தினம், பூலாங்கிணர் கிராமத்தில், திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வேளாண் வளம் செழிக்க வேண்டி, தங்கள் நிலங்களில் விளையும் நெல் உள்ளிட்ட தானியங்கள், கரும்பு ஆகியவற்றை கொண்டு, இச்சப்பரம் அழகுபடுத்தப்பட்டது.நேற்று காலை, பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.கிருஷ்ணாபுரம், வாளவாடி, தளி என வழியோர கிராம மக்கள், திருச்சப்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.வழி நெடுகிலும் அதன் மீது, விளைவித்த உப்பு, தேங்காய், பழவகைகள், தானியங்கள் படைத்தும், வீசியும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் வந்தது.மலையின் நுழைவாயில் பகுதியான, யானைக்கல் பகுதியில், சுற்றுப்புற மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் திரண்டு வந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தும், நடனமாடியும் வரவேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தினர்.தேன், தினைமாவு உள்ளிட்ட மலைகளில் விளையும் பொருட்கள் சுவாமிக்கு படைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, திருச்சப்பரத்தை பெற்று, கோவில் வளாகத்திற்கு வந்தனர்.காவடியாட்டம், ஒயிலாட்டம், மலைவாழ் மக்கள் நடனம் என களை கட்டியது. தொடர்ந்து, திருச்சப்பரம், மூம்மூர்த்திகளின் விமான கோபுரமாக நிறுவப்பட்டது.தொடர்ந்து, மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் துவங்கின. சிறப்பு வேள்வி, புண்யாகவாசனத்துடன், இரவு, 8:00 மணிக்கு, சுவாமிகளுக்கு முதல் கால யாக பூஜையும், மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 10:00க்கு, இரண்டாம் கால பூஜையும், அதிகாலை, 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடக்கிறது.அதிகாலை, 5:00 மணிக்கு, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் 16 தீப தரிசனமான, சோடச உபசார தீபாராதனை நடந்தது. மகா சிவராத்திரி விழாவில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.