பதிவு செய்த நாள்
19
மார்
2021
05:03
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி மாத திருவிழாவையொட்டி நேற்று கும்ப பூஜை நடந்தது. தர்மபுரி அடுத்த அன்ன சாகரத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாசி மாத திருவிழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது தொடர்ந்து, அம்மனுக்கு நடந்த கும்ப பூஜையில், கத்தரி, வெண்டை, தக்காளி, பாகல், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள், அகத்தி, பாலை, பசலைகீரை உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகளால், சிறப்பு படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் சிலர் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகள் தயாரித்து அம்மனுக்கு படையல் வைத்து வழிப்பட்டனர். பின், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னசாகரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.