பதிவு செய்த நாள்
22
மார்
2021
01:03
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை அரசு வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த முடிவு செய்யபட்டது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா 13நாட்கள் நடப்பது வழக்கம். 2020ல் கொரோனா பரவலால் பூக்குழி திருவிழா ரத்தானது. இந்தாண்டு பங்குனி விழா மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 11 ல் பகல் 1:35 மணிக்கு பூக்குழி, ஏப்., ல் 12:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.இதற்கான ஆலோசனை கூட்டம் தக்கார் இளங்கோவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் செயல் அலுவலர் கலாராணி, தாசில்தார் சரவணன், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர்.
அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழா நடத்தவும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கோயில் வளாகத்திற்குள் பஜனை, ஆன்மிக கச்சேரிகள், கோயில் எதிரில் மைதானத்தில் சொற்பொழிவு கூட்டம் நடத்துவதை தவிர்க்கவும், மண்டகப்படிக்கு வழக்கம்போல் அம்மன் வீதியுலா செல்லவும், பூக்குழி, தேரோட்டத்தின்போது பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் கட்டாயம் அணிந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.