குறுமுனிவரான அகத்தியர் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரிடம் உபதேசம் கேட்டார். அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை ‘லலிதா சகஸ்ர நாமம்’ என்னும் பெயரில் ஹயக்ரீவரும் எடுத்துரைத்தார். ரகசியமான இதற்கு விளக்க உரை எழுதியவர் பாஸ்கரராயர் என்னும் மகான். பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த இவர் வித்யா உபாசகராக இருந்தார். ஸ்ரீசக்கரத்தில் அம்பிகையை நிலைநிறுத்தி மந்திர பூர்வமாக வழிபடுவதை ‘வித்யா உபாசனை’ என்பர். லலிதா சகஸ்ரநாமத்தின் ஒவ்வொரு மந்திரமும் ஆழ்ந்த பொருள் கொண்டது. இருந்தாலும் பொருள் தெரியாமல் பக்தியுடன் சொன்னாலும் பலன் கிடைக்கும். ரகசியமான இதனை ஆர்வத்துடன் கேட்டால் மட்டுமே ஒருவர் மற்றொருவருக்கு சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.