பதிவு செய்த நாள்
29
மார்
2021
05:03
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் நேற்று பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 19ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை மூலவர்கள் விநாயகர், முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேல்குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் சுமந்து இளைஞர்கள், பெண்கள் நொச்சியூரணியிலிருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அரண்மனைத்தெரு, கேணிக்கரை சந்திப்பு, வண்டிக்காரத்தெரு வழியாக ஊர்வலம் வந்ததால் அனைத்து வழிகளிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது.மேளதாளம் முழங்க, உறவினர்கள் புடை சூழ பக்தர்கள் நேர்த்திக்கடன்செலுத்தியதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.ராமநாதபுரம் டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் ராமநாதபுரத்தை ஒட்டிய தொருவளூர், குமரய்யா கோயில், முடிவீரன்பட்டி முருகன்கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் வினை தீர்க்கும் வேலவர் கோயில், குண்டுக்கரை முருகன் கோயில் உள்ளிட்ட 50 கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடந்தது.