பதிவு செய்த நாள்
29
மார்
2021
05:03
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை, 10:00 மணிக்குசுவாமிக்கு திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டு, மதியம், 12:30 மணிக்கு, முருகன், வள்ளி, தெய்வானைக்குதிருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.மாலையில், தேவியர்களோடு சுவாமி ரதத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.- நிருபர் குழு -