பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
05:04
அவிநாசி: கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி, நேற்று அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் திருநாள், நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு கிறிஸ்தவர்களின் தவக்காலமாக, 40 நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த மாதம், 17ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் துவங்கியது. ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்ட தினத்தை நினைவு கூறும் புனித வெள்ளி நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நற்கருணை ஆராதனை, பிரார்தனை நடத்தப்பட்டன. மதியம் 3:00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 3 மணிக்கு சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக திருப்பலி நடத்தப்பட்டது. நாளை ஏசுவின் உயிர்ப்பு நினைவு கூறும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று நள்ளிரவு,12 மணி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட உள்ளன. அவிநாசி புனித தோமையார் தேவாலயத்தில் நேற்று காலை, 8:00 மணி முதல், பங்கு குருக்கள் கென்னடி, கோசப் பிரகாசம், நற்செய்தியாளர்கள் வாலண்டைன், விக்டர் கனகராஜ் ஆகியோர் மறையுரை வழங்கினர். இதேபோன்று, மாவட்டம் முழுக்க உள்ள கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது. நன்கருணை பீடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.