பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
05:04
கொன்னி :மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை, இடது ஜனநாயக முன்னணி அரசு, லத்திகளால் அடித்து விரட்டியது, என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், வரும், 6ம் தேதியன்று, ஒரே கட்டமாக நடக்கிறது.இதையொட்டி, பத்தனம்திட்டா மாவட்டத்தின் கொன்னியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:இடது ஜனநாயக முன்னணி அரசு, இந்த மாநிலத்திற்கு என்ன செய்தது... முதலில், அவர்கள் கேரளாவின் உருவத்தை சிதைக்க முயன்றனர். கேரள கலாசாரம் மிகவும் பின்தங்கியது என, நிறுவ முயன்றனர். பின், தங்கள் முகவர்கள் வாயிலாக, புனித தலங்களை நிலைகுலையச் செய்தனர். மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய அய்யப்ப பக்தர்களை, லத்திகளால் வரவேற்றனர். அப்பாவி அய்யப்ப பக்தர்கள் குற்றவாளிகள் அல்ல. நம் நாட்டின் கலாசாரத்தை கொச்சைப்படுத்துவதேயே, கம்யூனிஸ்ட் கட்சிகள் காலம் காலமாக செய்து வருகின்றன; இனியும் அதை அனுமதிக்க முடியாது.
கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வரும், இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகள், மக்களுக்கு பாவங்களை இழைத்துள்ளனர்.தங்களை தோற்கடிக்கவே முடியாது என்ற அகம்பாவம் அவர்களிடம் உள்ளது. இதனால், ஆணவத்துடன் உள்ளனர். மக்களிடம் இருந்து விலகி உள்ளனர். பணத்தாசை தலைக்கு ஏறி கிடக்கிறது. எனவே தான், தங்கக் கடத்தல், அமெரிக்க டாலர் கடத்தல், சோலார் வழக்கு என அடுத்தடுத்து ஊழலில் சிக்கினர். இரு அரசும், தவறு செய்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதில் போட்டி போட்டு செயல்படுகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.