பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
07:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஏப்., 15 இரவு அனுக்கையுடன் சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இதன்படி ஏப்., 16 காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது. அன்று இரவு சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்மன், விநாயகர், முருகன் என பஞ்ச மூர்த்திகள் சிம்மாசனத்தில் வீதி வலம் வருவர்.
தினமும் சுவாமி பிரியாவிடையுடன், அம்பாள் தனியாக நந்திகேஸ்வரர், கிளி, குண்டோதரன், கைலாச கற்பக விருஷம், அன்ன வாகனம், ரிஷப, குதிரை வாகனங்களில் வீதி வலம் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வாக ஏப்., 22 ல் காலை நடராஜர் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் திக்விஜயம் நடக்கிறது. மறுநாள் விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலமும், இரவு சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஏப்., 24 காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்று, இரவு பட்டணப் பிரவேசம் நடக்கும். மறுநாள் 10:00 மணிக்கு மேல் சித்திரை தேரோட்டமும், இதனைத் தொடர்ந்து ஏப்., 26 காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.