ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அரண்மனை முப்புடாதி அம்மன் கோயிலில் கொடை திருவிழா 3 நாட்கள் கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் மெயின்ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே அரண்மனை முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கொடை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 3ம் தேதி இரவு மாக்காப்பு தீபாராதனையும், ஆழ்வை கோமதிநாயகத்தின் வில்லிசை கச்சேரியும் நடந்தது. இரண்டாம் நாள் மாலை குடியழைப்பு வைபவமும், பணகுடி சிவா குழுவினரின் நையாண்டி மேள கச்சேரியும், சுப்பையா ராஜலட்சுமி குழுவினரின் கரகாட்டமும் நடந்தது. கொடை திருநாளன்று காலை பால்குடமும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதலும், மதியம் உச்சிகால கொடையும், மாலை கும்பாபிஷேகமும், இரவு அம்மன் வீதிஉலாவும், பின்னர் படைப்பு தீபாராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.