பதிவு செய்த நாள்
04
ஏப்
2021
03:04
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு, மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களின் வம்சாவளியினருக்கு மட்டுமே, கோவிலில் சேவை செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.
இந்த குடும்பங்களைச் சேர்ந்த அர்ச்சகர்களை, இரண்டு குடும்பங்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் தலைமை அர்ச்சகராகவும் செயல்படுவார். தலைமை அர்ச்சகரின் தலைமையில், ஏழுமலையான் கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது.ஆனால் அர்ச்சகர்கள் பலர், தங்கள் குடும்பங்கள் ஏழுமலையான் சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டதால், தாங்களால் இயன்ற வரையில் சேவை செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஆந்திர அரசிடம் முறையிட்டனர். இதை பரிசீலித்த, ஆந்திர அரசு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டது.அதன்படி, ஓய்வு பெற்ற அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தலைமை அர்ச்சகராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற ரமண தீட்சிதர், மீண்டும் அதே பணியில் நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில், தற்போது பணியில் உள்ள தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் மீண்டும் பணியில் தொடர்வாரா என்பது குறித்து விளக்கப்படவில்லை. இதனால், அர்ச்சகர்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது.