பதிவு செய்த நாள்
05
ஏப்
2021
10:04
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம் உள்ளிட்ட, பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு வெள்ளிகவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவர் தட்சணகாசி காலைபைரவர் கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது.
இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவருக்கு, அஷ்டமியை முன்னிட்டு நேற்று, சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.