பதிவு செய்த நாள்
04
ஏப்
2021
10:04
திருப்பரங்குன்றம்:மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா, மாணவர்கள் செந்தில்குமார், சப்பாணி, விஸ்வா ஆகியோர் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றத்தில் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இக்குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது குகை கோயில் செல்லும் வழியில் மரங்களுக்கிடையே இருந்த சாய்ந்த நிலையில் மூன்று அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட கல்வெட்டை கண்டுபிடித்தனர். அதில் 20 வரிகளில் 18-19ம் நுாற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் உள்ளன. நாகலாபடி வீரசின்னு சேர்வைக்காரன் மகன் உத்தண்டராமன் சேர்வைக்காரன், கூன்பாண்டியன் கோயில் முன் தண்ணீர் பந்தலும், நந்தவனமும், கிணறும் கட்டி உபயம் செய்தது தொடர்பாக எழுதப்பட்ட ஓர் தான உபயக்கல்வெட்டு என எழுதப்பட்டுள்ளது. எழுத்து வடிவம், காலம், எடுத்துரைக்கும் தகவல்கள் குறித்து முன்னாள் தொல்லியலாளர் சாந்திலிங்கம் உதவியுடன் ஆராயப்பட்டது.அக்கால ஆட்சியாளர்கள், சிறு நிலக்கிழார்கள், பொதுமக்கள், கோயிலுக்காக நில தர்மங்களை வழங்கி உபயம் செய்து, அது யாருக்கு வழங்கப்பட்டன மற்றும் எல்லை உரிமைகளை சுட்டிக்காட்டி கல்வெட்டில் பொறிப்பது வழக்கம். அதுபோல இக்கல்வெட்டு உள்ளது.
இதன்படி சுப்பிரமணிய சுவாமி கோயில், கிரிவலப்பாதையில் பக்தர்கள் தண்ணீர் குடிக்க கிணறும், தண்ணீர் பந்தலும், பக்தர்கள் இளைப்பாற நந்தவனமும் அமைக்கப்பட்டிருக்கலாம். கூன்பாண்டியன் கோயில் 7ம் நுாற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய அரசனை குறிப்பதாக உள்ளது. கோயில் அழிந்திருக்கலாம் அல்லது வேறு பெயரில் அழைக்கப்படலாம். அக்கோயில் குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த வேண்டும் என உதவி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.