பதிவு செய்த நாள்
05
ஏப்
2021
11:04
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, ராம் வன் காமன் மார்க் என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளது என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.